Monday, July 13, 2009

அலைந்து திரியும் காத்தாடி.

பால்யங்கள் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே வால்-காத்தாடியாய் அலைச்சல் நிறைந்தது. நகர் வாழ் சிறார்கள் கோடை விடுமுறைக்காக தாத்தா பாட்டி வீட்டிற்கும், கிராமத்து குழந்தைகள் சுற்றுலா என்ற பேரில் சென்னைக்கும் செல்வது வாடிக்கையானது.

அநேகமாய் ஒருவரின் முதல் பயணம் இதுவாகவே இருக்க முடியும்.
அசுர கதியில் பின்பக்கமாய் நகரும் மரங்களை முதல் முறை பார்த்த பிரமிப்பு இன்னும் என்னில் நினைவுள்ளது. சிறு வயதில் எனக்கு சொந்த ஊருக்கு போவதென்றால் நிலவுக்கு போகும் Armstrong போல அவ்வளவு இன்பம்,மகிழ்ச்சி.

ஆனால் இந்த பயணங்கள் அப்பாவுக்கு பிடிப்பதில்லை. ஏனோ அப்பா ஊருக்கு செல்வதை வெறுப்பார்.கோடை விடுமுறை காலத்தில் அவ்வளவு எளிதில் பேருந்து கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இருக்கை கிடைப்பது நம் குல தெய்வத்தின் கருணை தான். பல மணி நேரம் காத்திருந்து வேறு வழி இல்லாமல் நின்று கொண்டே பத்து மணி நேரம் பயணம் செய்ய நேரிடும்.

இதில் இரவு நேர பயணம் என்றால் துண்டை தரையில் விரித்து படுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் இருக்கையில் இருக்கும் பயணி அடிக்கடி எழுந்து நடமாடும் போது...பாரதியார் பாட்டு தான். (மோதி மிதித்து விடு பாப்பா!)முகத்திலேயே ஒரு மிதி விழும். அப்போதும் அப்பா அமைதியாக இருப்பார். எப்போதும் போல் அம்மா சண்டைக்கு போய் ரணகளம் செய்துவிடுவாள்.

இதில் எதையும் சட்டை செய்யாமல் நான் விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எப்போது வருமென்று காத்திருப்பேன்.அங்கே தான் ஒட்டுமொத்த உலகமும் பத்து நிமிடங்களில் இயங்கும். 'வண்டி பத்து நிமிஷம் நிக்கும்.சாப்டுறவங்க சாப்டுக்கலாம்..' என்று நடத்துனர் முழங்குவார்.

தம் அடிப்பது, சிறுநீர், பரோட்டா, புத்தகம், தொலைப்பேசி என்று ஆளுக்கொரு நிகழ்வில் பத்து நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.வராத போதும் சிறிநீர் போக சொல்லி அம்மா வற்புறுத்துவாள். துரித கதியில் அப்பா ஏதேதோ செய்துகொண்டிருப்பார். எனக்கு பத்து நிமிட வேகத்தை அவதானிப்தே போதுமானதாய் இருந்தது.

ஒரு வழியாய் திருச்சி அல்லது மதுரை பேருந்து நிலையம் அடைந்து அங்கிருந்து மாமா ஊருக்கோ சித்தப்பா ஊருக்கோ மினி பஸ் பிடிக்க வேண்டும். இந்த சிறு பேருந்தில் இருக்கை பிடிப்பது ஒரு கலை. துண்டு, மஞ்ச பை, கூடை, பேப்பர் என சகல பொருட்களையும் ஜன்னல் வழியே போட்டு இடம் பிடிப்பார்கள். சமயத்தில் கை குழந்தையை கூட ஜன்னலில் திணித்து இடம் பிடிக்கும் பழக்கம் எம் வெப்ப மண்டல மக்கள் இடையே உண்டு.

இது போன்ற போர்க்களம் தான் எங்களின் முதல் பயணமாக இருக்கும். தொடர் வண்டி, மகிழுந்து, இருசக்கரம், ஆட்டோ, விமானம் என்று சகலத்திலும் பயணித்த பின்பும் (குப்பை லாரி உட்பட) முதல் முறை அசுர கதியில் பின்பக்கமாய் நகர்ந்த மரங்களின் வியப்பும், விழுப்புரத்தின் பத்து நிமிட வேகமும், புழுதி பறக்கும் டவுன் பஸ் சாலையும் இந்த நூல் அறுந்த காத்தாடியை இன்னும் அலைந்து திரிய சொல்கிறது


2 comments:

  1. என் காத்தாடி பெங்களூர் ரயில் நிலையித்திற்கும் அக்கா/அத்தை/சித்தப்பா வீட்டிற்கும் இடையே மட்டும் அலைந்து திரிந்து கிழிந்து போனது.

    ReplyDelete