வெப்ப மண்டல வாழ்கையில் வளர்ந்த என்னால் உரக்க கூவி பேசாமல் இருப்பது கடினம். கடைசி பகலின் கடைசி மனிதன் சாவை முத்தமிடும் முன், உலகில் உருவான லட்சக்கணக்கான வார்த்தைகளையும் பசியுடன் பேசி தீர்ப்பதை போல் பேசி தீர்த்துவிடுவேன். சத்தமாய் பேசுவது என் மரபணு மூலக்கூறுகளில் ஒன்று. உறையும் மௌனங்களை உடைக்க மொழியோ, திரையோ, இயற்கையோ, உளவியலோ, எதோ ஓர் ஆயுதம் நாவில் சிக்கி விடும்.
ஆனால் அண்மை கால பெருவெளியில், என்னை நானே மௌனத்தின் குகைக்குள் நடுங்கும் கரத்தால் ஒளித்து, ஒளிந்து பதுங்கி கொள்கிறேன். ஏதேனும் சொல் யாரேனும் ஒருவரை கிழித்துவிட கூடாது என்பதால். உண்மையின் சுவை உவர்க்கும் என்பதால். ஆள்காட்டி விரல் வியர்க்கும் என்பதால். வார்த்தைகளின் வெப்பநிலை தாளாமல் சுற்றம் சுட்டுவிடும் என்பதால்.
வானம் பெரிது. யாவருக்காகவும் மழை பொழியட்டும். காற்றின் தாள்களில் நிரந்தரமாய் நிர்வாணம் எழுதிவிடுகிறேன்.எழுதுகோல் , எரிமை, எழுத்து, எழுதும் என் கரிய கரம் - என பல யாவும் அழிய கடவது. மௌநித்துவிடுகிறேன்.
மன்னியுங்கள். இது எனது தன்மை அல்ல. இது என்ன? உங்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் பேசி கொண்டே தான் இருப்பேன். வார்த்தைகளால் என் இரைப்பை நிரப்புவேன். இறுதி எச்சரிக்கை. உங்கள் செவிப் பறைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதி மனிதன் அலறிய முதல் வார்த்தையை இப்போது நான் ஓலமிட்டு கத்தப்போகிறேன்.
silencer fit panradha dhaan ipdi solreengalo?
ReplyDelete