Showing posts with label அழகியல். Show all posts
Showing posts with label அழகியல். Show all posts

Monday, August 24, 2009

அழகு! எது அழகு!


எங்கள் நிறுவனம் எமக்கு தந்திருக்கும் வீடு ஒரு காட்டு பங்களா. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள், செடிக்கொடிகள் நிறைந்தவை. எனவே அணில்களின் சரணாலயமாய் மாறி போனோம் - வீடும் நாங்களும். அணில்கள் கொஞ்சி கொள்வதில் இருந்து காதல் செய்வது வரை அருகில் இருந்து கண்டு ரசிக்கும் வரம் வாய்க்க பெற்றோம். சில சமயம் பாம்புகள் அணில்களை வேட்டையாடுவதையும் பார்க்க நேரிடும்.
-
-
அணிலின் சிறப்பே அதன் பஞ்சுமிட்டாய் வால் தான். ஒரு அணில் பாதி அறுந்த வாலுடன் பரிதாபமாய் துணி காயும் கொடியில் விளையாடிக் கொண்டு இருந்தது. மற்றொன்று நீண்ட வாலுடன் திரிந்து கொண்டு இருந்தது. நாங்கள் பார்த்ததிலேயே நீண்ட வால் கொண்ட அணில்.
-
-
"இந்த அணில் பாருங்க செல்வா.. வாலோடு அழகா இருக்கு" என்றேன் நான்.
"இல்ல ராஜ்.. கொடியில இருக்கும் அணில், பாம்போடு சண்டை போட்டு பாதி வாலை இழந்து இருக்கலாமே? அந்த அனுபவம் தான் அழகு" என்றார் செல்வா.
-
-
முழுமை அழகல்ல.அனுபவமே அழகு.வாயடைத்து போனேன்.



Wednesday, August 19, 2009

கதக் - கசல் - கலை வெட்பம்.


கடந்த வார இறுதி நாட்கள் இந்திய கலாசார மன்றத்தின் உதவியால் கலை சார்ந்து கழிந்தது. அறுபத்தி ரெண்டாவது சுதந்திர நாளை கொண்டாட சனி இரவு கதக் நடனத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது இ.க.மன்றம்.

சேரிகளின் சகதியில் லொஜக் மொஜக் என்று வடிவேலு ஸ்டைலில் திரிந்த நமக்கு கதக் ரொம்ப புதுசு. இருந்தாலும் ஏதோ கலை பசியில் சென்றேன்.

வழக்கமான சமாச்சாரங்கள் முடிந்து நடனக்காரர்கள் கிருஷ்ணர் ராதை கதைக்கு வந்தார்கள். பக்தி இயக்கத்தின் காலத்தில் தோன்றிய கதக்கின் சிறப்பே இந்த கிருஷ்ணன் கதை தான். இந்திய இதிகாசங்கள் காமத்தை கொண்டாடியுள்ளது. காதலும், கூடலும் இறை வழிபாடாய் திகழ்ந்துள்ளது. இத்தகைய காமத்தை உணர்த்தும் வகையில் தங்கள்இரு உடலையும் செய் நேர்த்தியுடன் நடனக்காரர்கள் பம்பரமாய் சுற்றியமை அரங்கத்தையே கரஒலியில் கட்டி போட்டது .

திடீரென என் இரவுகளை ஆக்கிரமித்த இசையின் கசிவை கேட்டேன். அது மிர்சா காலிபின் உருது கஸல்!இத்தனை நாட்களாய் பாடலாக கேட்ட காலிபின் கஸலை இப்பொது கதக் வடிவில் பார்க்க போகிறேன் என்ற உணர்வே ஒரு பரவசத்தை கொடுத்தது.

உயிரை உறிஞ்சும் கசல் இசையும்,தீரா வெறியுடன் ஆடி தீர்த்த அவர்களின் காலும், யுகம் யுகமாய் தொடரும் ஆதி மனிதனின் கதை சொல்லும் இச்சையும்... கண்கலங்க வைத்தது.
கதை சொல்லியும், கேட்பவனும் கருவியாக மட்டுமே இருக்கிறான். கதைகள் தங்களை தாங்களே நிகழ்த்தி கொள்கின்றன.



குறிப்பு - இலங்கையின் இந்திய கலாச்சார மன்றத்துக்கு ஏன் வடஇந்திய கலைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது? வில்லு பாட்டும், கும்மியும், சிலம்பும், இந்தோனேசியா கலைகளா?

Thursday, July 9, 2009

மைகேல் ஜாக்சனின் மரணத்தை கொண்டாட வேண்டும்!


சரித்திரத்தின் மாபெரும் இசை ஒலித்து முடிந்துள்ளது. கலையை, காதலை, புகழை இறுக்கமாய் நெஞ்சோடு கட்டிபிடித்துக்கொண்டு நடன மாடிய ஜாக்சன்... மரணத்தையும் அணைத்துக்கொண்டு முத்தம் இட்டுளான். ஒரு இசை போல அசையும் இவனின் இதழ்களில், உலகம் முத்தமிடட்டும்.

இந்த உலகை தன் உடலசைவால் கட்டி வைத்திருந்த மந்திரவாதியின் உறங்கும் நேரம் இது.உறங்கும் இவனுக்கு புலம்பலை தாலாட்டாக பாடதீர்கள். இவனது பசித்த மனம் நமது புலம்பலை விரும்பாது. மாறாக தனது மரணத்தை சத்தமிட்டு கொண்டாட சொல்லி மன்றாடும்.

இப்படி ஒரு வெறி பிடித்த கால்களை, உலக மேடை கண்டதில்லை.